திருமுருக கிருபானந்த வாரியார் - ( வாழ்க்கை சுருக்கம் )


** திருமுருக கிருபானந்த வாரியார் - ( வாழ்க்கை சுருக்கம் )**

வேலூர் அருகில் உள்ள. காங்கேய நல்லூரில் 1906 ஆம் ஆண்டு, (25-08-1906) மல்லையதாஸ் பாகவதர், கனகவல்லி அம்மையாரின் புதல்வராக அவதரித்தார் கிருபானந்த வாரியார்.. 

சோதிடத்தில் வல்லவரான அவரது தந்தை அவர் பிறந்த நட்சத்திரமாகிய சுவாதிக்கு ஏற்றபடி இந்த திருப்பெயரை சூட்டினார். 


ஐந்து வயதில் வீரசைவ குல நெறிப்படி திருவண்ணாமலை பாணிபாத்ர மடத்தில் சிவலிங்க தாரணம் நடந்தது.. தந்தையார் இவருக்கு சடாஷர மந்திரத்தை உபதேசித்தார். 

மதுரை திருப்புகழ் சாமி ஐயா அவர்களிடம் சூட்சும சடாஷர மந்திர உபதேசம் பெற்றார்.. ஒருமுறை திருக்கரையூரில் வாரியாரது கனவில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் சடாஷர மந்திரத்தை உபதேசித்து அருளினார்.. 

வாரியாருக்கு மூன்று வயதில் தகப்பனாரிடம் எழுத்தறிவு தொடங்கியது. ஐந்து வயதிலேயே ஏடு படித்தார். எட்டு வயதில் வெண்பா பாடினார். பத்து பன்னிரண்டு வயதில் பன்னீராயிரம் பாடல்களை மனனம் செய்யும் ஆற்றலை பெற்றார்.. தகப்பனார் மிகசிறந்த பௌராணிகர்.. அவருக்கு பின், தமது 19 ஆவது வயதில், பாட்டு பாடி கொண்டே சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். 

பள்ளிக்கு போகாமலே தந்தையையே ஆசானாக கொண்டு, பல பல கற்றார். நடமாடும் பல்கலைகழகமாக திகழ்ந்தார்.. சங்கீதத்தை தந்தியாரிடம் கற்றார். 

இல்லறம் நல்லறமாக திகழ அவரது தாய்மாமன் மகள் அமிர்தலக்ஷ்மி அம்மாளை மணந்து கொண்டார். 
சென்னையில் மிகுதியாக இசை சொற்ப்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருந்ததால், சென்னையிலேயே குடியேறினார். அப்போது தென்மாடம் வரதாசாரியாரிடம் வீணை பயின்றார். சென்னையில் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றார்.. 

காசி, கேதாரம், அமர்நாத், பத்ரிநாத், நேபாளம், கோகர்ணம், ஸ்ரீ சைலம், மற்றும் பல தலங்களையும் தரிசித்து, எல்லா முக்கிய நகரங்களிலும் சொற்பொழிவாற்றிய பெருமை வாரியாருக்கு உண்டு.. 
தமிழகத்தில் அவர் கால் படாத ஊரே இருக்காது.. இதை தவிர, உலகின் பல நாடுகளுக்கும் சென்று அரும்பெரும் இந்து சமய பணிகளை ஆற்றி மேருவனைய புகழ் கொண்ட மேதகை, வாரியார். 

" மெய்யன்பர்களே ! ஞானமே வடிவாகிய வயலூர் மேவிய வள்ளலின் தனிபெருங் கருணையினாலே.." என்று சொற்பொழிவை துவங்கினால் பட்டி தொட்டிகளில் வாழும் பாமரர் முதல் பட்டணத்தில் படித்தவர் வரை அனைவரும் தன்னை மறந்து அவர் பேச்சை ரசிப்பர். 

"வாரி" என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள்.. கிருபானந்த வாரி ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனி கடவுள். அருணகிரிநாதரே அவரது மானசீக குரு.. சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவத் திருமுறைகள், திவ்ய ப்ரபந்தம், பிள்ளைதமிழ் நூல்கள் என்று இப்படி எத்தனை இலக்கியங்கள் உள்ளனவோ, அத்தனையையும் கற்றறிந்தவர்.. அருணகிரிநாதரின் அருள் நூல்களான திருப்புகழ், அலங்காரம், அநுபூதி, அந்தாதி வகுப்பு என எல்லாவற்றையும் முற்றும் பருகி, எழுத்தெண்ணி, நயம் காட்டி, தங்கு தடையின்றி சந்த ப்ரவாகத்தை கொட்டும் அதி அற்புத ஞானவாரி. 

" திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களை பற்றி தமிழ் நாட்டில் அறியாதார் இல்லை.. அவர் நாவில் திருப்புகழும், கையில் திருப்பணியுமாக நடமாடும் திருத்தொண்டர்.. நாயன்மார்கள் வரிசையில் வைத்து அவரை அறுபத்து நான்காவது நாயனாராக வழிபடும் சிவநேய செல்வர்களும் இருக்கிறார்கள் " என்று ஆனந்த விகடன் 3-8-1958 இதழில் எழுதியிருந்தார்கள்.. 

" திருப்புகழ்அமிர்தம் " என்ற மாத இதழை 1936 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடங்கி 37 ஆண்டுகள் நடத்தினார். பல நூறு திருப்புகழ் பாடல்களுக்கு உரை விளக்கம் எழுதி வெளியிட்டார். பல ஆன்மீக இலக்கிய நூல்கள், கதைகளை கட்டுரைகளை எழுதி சமுதாயத்தில் ஒழுக்க நெறியை வளர்த்தவர்.. 

" சொல்லால், செயலதனால், சொற்ப்பொழிவால், கீதத்தால் 
வல்ல அணிப்பூசை மாண்பதனால் - எல்லார்க்கும்
இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமி 
வல்லாண்மை மேலாகு மால் "
- தவத்திரு சுந்தரசுவாமிகள்.. 

காலையானால் ஜபம், தியானம், பின்பு ஸ்நானம், பூஜை, ஓய்வு ஒழிவின்றி கட்டுரைகள் வரைதல், மாலையில் சந்தியாவந்தனம், பிறகு சொற்பொழிவு செய்யும் அறநெறி வாழ்க்கை வாரியாருடையது..

சூரியன் உதிக்காத நாள் இல்லை. அதுபோல, மாலையானால் மாலையும் கழுத்துமாக வாரியார் சொற்பொழிவு ஆற்றாத நாளே கிடையாது.. 

பல கோவில் திருப்பணிகள், அறப்பணிகள், கல்வி கூடங்கள் முதலியன அவரால் செழித்தன. காந்திஜி, ராஜாஜி போன்று இம் மூதறிஞரும் தமக்கு வரும் கடிதங்களுக்கு விடாது பதில் எழுதும் பழக்கமுடையவர். 

மாதம் தோறும், படிக்கும் பல குழந்தைகளுக்கு உதவி தொகை அனுப்புவதை கடமையாக கொண்டிருந்தவர். 

பள்ளிக்கூடத்தை மிதியாதவர் வாரியார். ஆனால் பெரிய கல்லூரிகளுக்கும் செய்ய இயலாத அளவுக்கு அறிவு தானம் செய்தவர். காஞ்சி மாமுனிவர் அவருக்கு " சரஸ்வதி கடாக்ஷமிர்தம்" என்று பட்டம் வழங்கினார். 

மேலும், ஷட்பதநாதர், அமுதமொழி அரசு, ப்ரவசன சாம்ராட் .. இப்படி 30க்கும் மேற்பட்ட பட்டங்களும் பாராட்டுக்களும் பெற்ற பெருந்தகையாளர்.. 

லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் விரிவுரை செய்ய வாரியார் சென்றார்.. அப்போது உடல் நலம் குன்றியதால் தாயகம் திரும்ப வேண்டியதாயிற்று.. வரும் வழியில் வான் வெளியில் முருகன் திருவடிகளில் கலந்தார். 

8.11.1993 அன்று காங்கேயநல்லூர் முருகன் கோவிலுக்கு எதிரிலுள்ள சரவணப்பொய்கை அருகில், அவரது திருவுடலுக்கு சமாதி கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள். 

20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற திருமுருகன் திருத்தொண்டர், திருமுருக கிருபானந்த வாரியார்.

ஔவையின் பாடல் ஒன்றின்படி, 
" சபை ஏறுவதால் நூற்றில் ஒருவர் : 
நல்ல புலவர் ஆதலின் ஆயிரத்தில் ஒருவர் :
பேச்சு வன்மையால் பதினாயிரத்தில் ஒருவர். 
வாரி வாரி வழங்குவதனால் கோடியில் ஒருவர் :"

** முற்றும்** 


1 comments:

electrical May 1, 2014 at 6:25 PM  

I remember Variar was visiting Manchavanapathy temple annually in 1960s during festival season and giving "Kathaprasangam" on various topics attracting public from various parts of Jaffna. I have never heard any Prasangam better than his.

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP