கடவுள் என்று ஒன்று உண்டா? PART -2- திருமுருக கிருபானந்தவாரியார்

கடவுள் என்று ஒன்று உண்டா? 
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய “ வாழும் வழி ” என்ற புத்தகத்திலிருந்து.



எந்தப் பொருளை எந்த கருவியினால் அறிய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.மணத்தை நாசியினால்தான் அறிய வேண்டும். ஓசையை செவியால்தான் அறிய வேண்டும்.ஓசையை முக்காலும் மணத்தை செவியாலும் அறிய முயல்வது முடத்தனமன்றோ?

நன்கு படித்த ஒருவர், ” மல்லி,முல்லை,ரோஜா முதலிய மலர்களில் மணம் இருக்கின்றது என்கின்றார்களே,அதனை நான் கண்ணால் கண்ட பிறகே ஒப்புகொள்ளுவேன்” என்று இருபத்தைந்து ஆண்டுகளாக பூதக்கண்ணாடியை வைத்து நறுமணத்தை கண்ணால் காண முயன்று கொண்டிருந்தார்.ஏன்?அவருக்கு நாசியில் சதை வளர்ந்திருந்தது. சுவாசக் காற்று வாய் வழியே சென்று கொண்டிருந்தது. எனவே,அவர் இந்தப் பிறப்பிலே நறுமணத்தைக் காண முயன்றால் முடியுமா?

நெடிது ஆராய்ந்து, ” மல்லிகையில்,முல்லையில்,ரோஜாவில் நறுமணம் உண்டு என்று கூறுகின்றவன் முட்டாள். மலரில் மணம் இல்லை. இல்லவே யில்லை.இது சுத்தப் பொய் ” என்று கூறினால் இதை யார் ஒப்புக் கொள்ளுவார்கள்.முக்கில் சதை வளர்ந்தவர்கள் ஒவ்வோர் ஊர்களில் இருப்பார்கள் தானே! அவர்கள்,” ஆம்,ஐயா கூறுவது உண்மை,மலர்களில் மணம் இல்லை” என்று கூறி ஆமோதிப்பார்கள். இவர்களைக்கண்டு நாம் இரங்க வேண்டுமேயன்றிச் சீற்றமடையக் கூடாது.

நறுமணத்தை நாவினால் அறிய முடியாது.சுவையை நாவினால் அறிதல் வேண்டும்.

சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்ற ஐந்தையும் நாக்கு,கண்,உடம்பு, செவி,நாசி என்ற கருவிகளால் அறிய வேண்டும்.கடவுள் இந்த ஐந்துக்கும் அப்பாற்பட்டவர்.அவரை இந்தப் பௌதிகக் கருவிகளால் அறியத் தலைப்படுவது அறிவுடைமையாகாது.மனத்தாலும் அறிய ஒண்ணாது. புத்தகங்களைப்படித்து,அதனால் எய்தும் நுலறிவாலும் உணர ஒண்ணாது. வாலறிவனை நுலறிவினால் உணர்தல் இயலாது.

ஒரு மகான் கோவிலுக்குச் சென்றார்.அங்கு ஒருவன் ஒரு குடத்தில் கையை விட்டு,அவசரம் அவசரமாகத் துளாவிக் கொண்டு இருந்தான்.அந்த மகான், “ அப்பா, நீ என்ன தேடுகின்றாய் ? என்று கேட்டார். அவன், மகானே,நான் யானைப்பாகன்.யானை எப்படியோ காணாமல் போய் விட்டது. அதைத்தான் இப்பானைக்குள் தேடுகின்றேன் என்றான்.மகான் சிரித்தார். யானையைப் பானைக்குள் தேடுகின்ற அறிவாளியும் உலகில் இருக்கின்றானா ?என்று அதிசயப்பட்டார்.

இறைவன் அறிவு வடிவானவர்.அறிவே வடிவாய ஆண்டவனை,அறிவு என்ற ஒன்றினாலேயே அறிதல் வேண்டும்.ஆனால் நுலறிவு அன்று.அனுபவத்தால் உண்ணடான (வாலறிவு) மெய்யுணர்வு,

வாழை நாரால் மலர் தொடுக்கலாம். மத யானையைக் கட்ட முடியாது. ஏணி வைத்து மாடி மீது ஏறலாம்.இமயத்தின் உச்சியாகிய எவரெஸ்ட் மீது ஏற முடியாது. படியினால் நெய்யை அளக்கலாம்.கடல் நீரை அளக்கலாகாது.அதுபோல,நுலறிவினால் பிற பொருள்களை அறியலாம். இறைவனை அடைய முடியாது.

இறைவனை அனுபவ அறிவால் அறிய முயல்வதுவே அறிவுடைமை.ஒரு பொருள் தொலைவில் இருக்குமானால் கண்ணுக்குத் தெரியாது.நீலகிரியில் இருப்பவனுக்கு சென்னை மாநகரம் தெரியாது தானே? தனக்குத் தெரியாமையால் சென்னை நகரமே இல்லை என்று கூறலாமா?

ஒரு பொருள் கண்ணை ஒட்டி வைத்தாலும் தெரியாது.எனவே,மிகத் தொலைவில் உள்ள பொருளும் தெரியாது.மிக நெருங்கிய பொருளும் தெரியாது.

திரைக்கு அப்பாலும் உள்ள பொருளும் தெரியாது.

பெரிய பொருளின் அருகே சிறிய பொருள் தெரியாது.சூரியன் முன்
நட்சத்திரம் தெரியாது.

பாலில் கலந்த சர்க்கரையும்,அப்பில் கரைந்த உப்பும் தெரியாது.மிக நுட்பமான பொருளும் தெரியாது.ஒருவனிடமுள்ள அன்பு,அறிவு இவைகள் தெரிய மாட்டா.இவை செயல்படும்போது மட்டும் உணர முடியும்.இது போல் கடவுள் மெய்யுணர்வுக்கு மட்டும் புலானாவார். உணர்ந்தவரும் இத்தன்மையால் உரைக்க மாட்டாமல் திகைப்பார்கள்.

" பச்சையப்பா! நம் முன்னோர்கள் பரம ஞானிகளாக விளங்கினார்கள். தொல்காப்பியர் முதல் அண்மையில் வாழ்ந்த காந்தியடிகள் வரை கடவுள் பற்றும் கடவுள் உணர்ச்சியும் உடையவர்களே. ஆழ்வார்களும், சமய குரவர்களும், நாயன்மார்களும், தாயுமானாரும், இராமலிங்க அடிகளாரும்,பாம்பனடிகளும் கடவுள் காட்சி பெற்றவர்கள்."

முன்னோர்கள் முடர்கள் என்றால்,முடர் பரம்பரையில் அறிவாளி வரமுடியாது. அகலக்கட்டையான வேட்டியிலிருந்து கிழிந்த துண்டு அதி அகலமுள்ளதாக இருக்காது என்பதை சிறு பிள்ளைகளும் உணர்வார்களே. ஆதலால்,நம் முன்னோர்கள் பேரறிவு படைத்த பெரியோர்கள்.

பச்சையப்பன் இந்த அறிவுமயமான அறிவுரையைக் கேட்டு கண்ணீர் அரும்பினான்.அப்பெருமானுடைய அடிமலர் மீது வீழ்ந்தான்.மெய் நடுங்கினான்.உள்ளம் பதைபதைத்த்து.உரை குழறியது.

part 3
http://manchavanapathy.blogspot.com/2013/11/part-3.html

0 comments:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP