கடவுள் என்று ஒன்று உண்டா...?PART-1--திருமுருக கிருபானந்தவாரியார்

கடவுள் என்று ஒன்று உண்டா? 
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய “ வாழும் வழி ” என்ற புத்தகத்திலிருந்து.

“ பெருமானே! தாங்கள் கூறியவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது கடவுள் அறிவு வடிவானவர் என்பது ஆகும்.கடவுள் அறிவுப்பொருளாக இருக்க,கோயில்களில் செம்பாலும் சிலையாலும் உருவங்கள் வைத்து வழிபடுகிறார்களே? கல்லும் செம்பும் கடவுளாகுமா? இது அறிவுக்குப் பொருந்துமா? ”

“ அப்பனே! இத்தகைய வினாக்கள் எழுவது இயல்புதான்.இவைகளுக்கு தக்க விடைகள் பகர்கின்றேன்.ஒருமைப்பட்ட மனத்துடன் கேள்.”

பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவியிருந்தாலும்,அந்தப் பசுவின் கொம்பைப் பிடித்து வருடினால் பாலைப் பெறமுடியுமா?வாலைப் பிடித்து வருடினால் என்ன கிடைக்கும்? பால் கிடைக்காது.பல் கிடைக்கும். பாலைப் பசுவின் மடி முலம் பெறுவது போல்,எங்கும் பரந்து விரிந்திருக்கும் இறைவனுடைய திருவருளைக் கோவிலில் விளங்கும் திருவுருவத்தின் முலமாகப் பெறுதல் வேண்டும்.

ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தாள்.அவன் படியாமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.பள்ளித் துணை ஆய்வாளர் அப் பள்ளிக்கு வந்தார்.எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள். ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப் பெற்று,மோர்க்குழம்புத்தான் போல் மொழு மொழுவென்று இருந்த இந்தப் படியாத தடியனைப் பார்த்து. “ தம்பீ! நீ என்ன படிக்கின்றாய்?” என்று கேட்டார்.

அவன் “ புத்தகம் படிக்கின்றேன் ” என்றான்.

“ புத்தகம் எங்கே ? ” என்று கேட்டார்.

“ வீட்டில் இருக்கிறது ” என்றான்.

“ புத்தகம் இல்லாமல் ஏன் வந்தாய் ? ”

“ மோட்டார்,லாரிகளில் அகப்பட்டுக்கொள்வேன் என்று என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.”

“ இது என்ன ஆடு மாடு அடைக்கின்ற பவுண்டா? ”

பள்ளித் துணை ஆய்வாளர் கரும் பலகையில், ”அறம் செய்ய விரும்பு ” என்று எழுதி, “ தம்பி இது என்ன படி” என்றார்.

அவன் அதைப் பார்த்துகொண்டே நின்றான்.

“ என்னப்பா! ஆறு மாதங்ளாக பள்ளிக்கு வருகின்ற உனக்கு ‘அறம் செய்ய விரும்பு’ என்பதை படிக்க்க் கூடத் தெரியவில்லையே ? ” என்று கூறி வெகுண்டார்.

பின்னர் குழந்தைகள் சுலபமாக படிக்கக் கூடிய விதத்தில் அக் கரும்பலகையில் “ படம் ” என்று எழுதினார்.

அம் மாணவனைப் பார்த்து “ இதனைப் படி” என்றார்.அவன் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நின்றான்.

பள்ளித் துணை ஆய்வாளர் ‘படம்’ என்ற பதத்தில் பகரத்தையும் மகர மெய்யையும் அழித்தார்.நடுவில் உள்ள எழுத்தைக் காட்டி,

“ தம்பி! இது உனக்குத் தெரிகிறதா? “ என்றார்.

“ தெரிகிறது ” என்றான்.ஆசிரியரும் ஆய்வாளரும் சற்று மகிழ்ந்தார்கள். ஓர் எழுத்தாவது தெரிகின்றது என்றானே என்று உள்ளம் உவந்தார்கள்.

“ தம்பி இது என்ன எழுத்து? ”

“ கோடு “ என்று கூறினான் அம் மாணவன்.

ஆசிரியரும் ஆய்வாளரும் சிரித்தார்கள்.

மற்றொறு மாணவனை அழைத்து “ இது என்ன ? ” என்று கேட்டார்.

அவன் ‘ ட’ என்று கூறினான்.

கோடும் அதுதான், ‘ ட’ வும் அதுதான். கற்றவன் ‘ ட’ என்று கண்டான்.கல்லாதவன் “ கோடு ” என்று கண்டான்.
கோட்டுக்குள்ளே அறிவுள்ளவன் ‘ ட’ என்ற ஒலியைக் காண்கின்றான்.

இது போல,கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளுக்குள்ளே ச்ச்சிதானந்தப் பரம்பொருளை ஞானிகள் காண்கின்றார்கள். அவைகளைச் செம்பு என்றும் கல் என்றும் கூறுவது ‘ ட’ என்ற எழுத்தைக் “ கோடு ” என்று கூறுவதை ஒக்கும்.

காதல் கணவன் வியாபார நிமித்தம் பம்பாய்க்குப் புறப்பட்டான்.மனைவி இனிய உணவுளை ஆயத்தம் செய்து,கணவனைப் புகைவண்டியில் ஏற்றினாள்.வண்டி புறப்படும்போது அவளது கண்கள் குளமாயின. விரைவில் வாருங்கள் என்று தழுதழுத்துக் கூறினாள்.

வண்டி புறப்பட்டதும் அவள் கைப்பையை எடுத்து அசைத்தாள்.அவன் கைத்துண்டை அசைத்தான்.புகைவண்டி நிலையத்தில் அவள் அப்படியே துண்போல அசைவற்று நின்றுவிட்டாள்.பின்னர் வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு வீடு வெறிச்சென்று இருந்தது.

மறுநாள் அன்பு த்தும்பும் கடிதம் எழுதி அனுப்பினாள்.கண்ணீரினால் அக்கடித்த்தின் எழுத்துக்கள் அழிந்திருந்தன.கை தடுமாறியதால் எழுத்துக்கள் கோணல் மாணலாக இருந்தன.

பம்பாய் சேர்ந்த கணவன்,மாண்புமிகுந்த மனைவியின் கடிதத்தைஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவசரம் அவசரமாக உறையைப் பிரித்து படிக்கத் தலைப்பட்டான். அந்தப் பொன்னெழுத்துக்களைக் கண்டு தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.இப்போது சிந்திப்பாயாக.

அவன் கடிதத்தைக் கண்டா அழுதான்?அந்த மைக்கோடுகளைக் கண்டா அழுதான்? இல்லை.இல்லை.கண்டது கடிதம். மனக்கண் கண்டது மனைவியினுடைய மலர்க்கரங்கள்.உணர்வில் உணர்ந்தது மனைவியின் அன்புடைமை.அந்த அன்பையும் பண்பையும் நினைத்து அழுகின்றான்.

இது போல,தெய்வத் திருவுருவத்தைக் கண்டு,பக்தர்கள் மனக்ண்ணால் இறைவனுடைய அருள் வடிவத்தையும்,மெய்யுணர்வால் இறைவனுடைய கருணைப் பண்பையும் உணர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஆதலினால்,தெய்வத் திருவுருவங்களைக் கண்டு அன்பர்கள் அழுகிறார்கள், தொழுகின்றார்கள் என்று உணர்வாயாக !

PART 2 Click below
http://manchavanapathy.blogspot.com/2013/11/GOD-IS-WHO.html

0 comments:

Post a Comment

There was an error in this gadget

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP