நவராத்திரி விரத,சகலகலாவல்லி மாலையின் பெருமைகள்





அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகி தமோ குண சஞ்சாரியாநன ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாகவும், ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாகவும், சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியாகவும், மூன்று அம்சமாக எமக்கு தோற்றமளிப்பதுடன் அந்த மூன்று அம்சங்களும் மேலும் பல அம்சங்களாக தோற்றமளிக்கின்றன.


துர்க்கையின் அம்சங்களாக (நவதுர்க்கை): வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை ஆகியனவும்;
சரஸ்வதி அம்சங்களாகளாக (அஷ்ட சரஸ்வதி): வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியனவும்;
இலக்குமியின் அமசங்களாக (அஷ்ட இலட்சுமி): ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி ஆகிய சக்தி அம்சங்களாக எமக்கு தோற்றமளிக்கின்றன.
நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும்.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.
ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. 
முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.
இப் புண்ணியகாலமானது ஒன்பது தினங்களைக் கொண்டது. அதனாலேயே நவராத்திரி என்னும் நாமம் பெற்று விளங்குகின்றது, அந்த ஒன்பது நாட்களிலும் லோகமாதாவாகிய பராசக்தியை (அம்பிகையை) ஒன்பது வடிவங்களில் பூஜிக்கப்பெறுகின்றாள். 
அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு. இவ் உலக வாழ்கை சிறப்பாக அமைய முக்கியமான கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) எம்பவற்றை இறைவியிடம் வேண்டி  இந்துக்கள் இப் புனித நவராத்திரி விழாவை விரதம் அனுஷ்டித்து கொண்டாடுகின்றனர். ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும்.
அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டுமாயின். அவற்றை அருளும் நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட கடப்பிடிக்கப் பட வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம், பொருள் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற பணத்தை பாதுகாக்க மன வலிமை வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களிற்கு பயன் படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம். 

இவ் நவராத்திரி விழாவின்போது ஆலயங்களிலும், பாடசாலைகளிலும், பணிபுரியும் அலுவகங்களிலும், தொழிற்சாலைகளிலும்ம் இல்லங்களிலும் கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம். அத்துடன் கும்பத்தை மையப்படுத்தி கொலுவைத்தும் வழிபடுவார்கள்.  கொலு வைக்கும் வழக்கம் இந்தியாவில் பிரபல்யமானது. இவ் வழக்கம் தற்பொழுது இலங்கையிலும் பின்பற்றப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய, முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியாகிய அம்பிகையை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக வெற்றியையும் (வீரத்தையும், தைரியத்தையும் ஒருநாளும் தளர்வு அறியா மனம்)  வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாக சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதிதேவியாக கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.
வீடுகளிலும் பாடசாலைகளிலும் 9 நாட்கள் மட்டுமே இவ் விழா கொண்டாடப்பெறுகின்றது. சில இடங்களில் 10 நாளும் பூசைகள் செய்வார்கள். ஒன்பது நாட்களும் வண்ணக் கோலங்கள் போட வேண்டும். இந்த ஒன்பது நாளும் அம்பாள் ஒன்பது வகையான கோலத்துடன் காட்சியளிக்கிறாள் என்பது ஐதிகம்.
முதல் தினத்தில் தேவி மூன்று வயதுள்ள பாலை யாகவும், இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரிகை என்ற நவாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், மூன்றாவது தினத்தில் பஞ்சதசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், நான்காவது தினத்தில் பதினாறு வயதுள்ள ஸ்திரீயாகஷோடசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ என்ற பெயருடன் மாத்ருகா வர்ணஸ்வரூபிணியாகவும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யாபீஜாக்ஷர ரூபிணியாகவும், ஏழாவது தினத்தில் துர்க்கமாஸுரனைக் கொன்றமஹாதுர்க்கை யாகவும், எட்டாவது தினத்தில் மஹிஷாஸுரனைக் கொன்ற மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணியாகவும், ஒன்பதாவது தினத்தில் சும்பன் நிசும்பன் என்ற இரு அஸுரர்களைக் கொன்று ஜகத்தை ரக்ஷித்த மகாசரஸ்வதி யாகவும் அம்பாள் விளங்கி வருகிறாள் என்பது ஐதீகம்

கொலுவைத்து ஒன்பது நாள் பூஜை செய்து வீட்டுக்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம், தட்சணை, நைவேதியப் பொருள் கொடுக்க வேண்டும். ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களான சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களில் பூஜை செய்யலாம். இதுவும் செய்ய முடியாதவர்கள் அஷ்டமி நவமியில் பூஜை செய்து விஜய தசமியில் முடிக்கலாம். 
ஒன்பதாவது நாள் ஆயுத பூசை என அழைக்கப்பெறும் சிறப்புப் பூசை நிகழ்த்தப்பெறும். கல்விக்கான சரஸ்வதி பூஜையன்று புத்தகங்கள், இசை கருவிகள், தொழில் செய்யும் கருவிகள் எல்லாம் பூஜையில் வைக்க வேண்டும். மறுநாள் விஜய தசமியன்று பூஜை செய்து படிக்கவேண்டும். அவரவர் சங்கீதம் தொழில் குருவைக் கண்டு தொழுது குருதட்சணை கொடுத்து வணங்க வேண்டும்.
புதிய தொழில் தொடங்க உகந்த நாள் விஜயதசமி நன்னாளாகும். இரவு பால் நிவேதனம் செய்து பொம்மைகளைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் பூஜையிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து அடுத்த வருடத்துக்காக அம்பாளை வரவேற்க தயாராக வேண்டும். அன்றைய தினம் பாடசாளைகளில் பாலகர்களுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பெறும். 

10வது தினமான 24.10.2012 ம் திகதி விஜயதசமி ஆலயங்களில் வெற்றித்தினமாக கொண்டாடப்பெறுகின்றது. விஜய தசமி தினம் என்பது அம்பிகை; தவ வலிமையினால் பிரமதேவனிடம் பெற்ற வரத்தினால் அகங்காரம் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனை "சண்டிகா தேவியாக" (துர்க்கா தேவி, காளிதேவி எனக் கூறுவாரும் உளர்) அவதாரம் எடுத்து சங்காரம் செய்த வெற்றித் திருநாளாக கொண்டாடப்பெறுகின்றது. 
துன்பத்தை - அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது. 

வேறு விதமாக கூறுவதாயின் அம்பிகை உயிர்களிடத்தே காணப்படும் அசுரத்தன்மைகளை அழிக்க சண்டிகாதேவியாக, துர்க்காதேவியாக அல்லது காளி தேவியாகத் தோன்றி அவற்றை சங்காரம் செய்கின்றாள் எனலாம். இவ் வெற்றித் திருநாள் சைவ பெருமக்ககளால் அம்பிகை ஆலயங்களில் (தற்போது எல்லா ஆல்யங்களிலும்) "மானம்பூ விழா" அல்லது "வன்னிவாழை வெட்டு" விழாவாக கொண்டாடப் பெற்றுவருகின்றது. 
வன்னி மரக் கிளைகள் குத்தப் பெற்ற கன்னிவாழையை மகிஷாசுரன் ஆக ஆவாகணம் செய்து அதனை வெட்டி விழுத்துவதன் மூலம் மகிஷாசுரனைச் சங்கரித்தல் நிகழ்வு நடைபெற்று அதன் வெற்றியை வெற்றித் திருநாளாக கொண்டாடுதலே மானம்பு அல்லது கன்னிவாழை வெட்டுவிழாவாகும். பணிப்புலம் முத்துமாரி அம்பிகை, காலையடி ஞான வேலாயுதர் ஆலயம் சென்று அங்கு வன்னிவாழை வெட்டு விழா நடைபெறுகின்றது.
இலங்கையிலும்,தமிழகத்திலும் சரஸ்வதி பூசை எனவும், இந்தியாவில் வட மாநிலங்களில் துர்கா பூஜை எனவும், கர்நாடகத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.

இந்தியாவில் கொல்கத்தா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.
வீடுகளில் பெண்கள் கொலுவைத்து தங்களின் விரதத்தைத் தொடங்குகின்றனர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்து, பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வழங்கி இவ் விரதத்தை கொண்டாடுவது வழக்கமாகும்.

தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள். நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருவதே இவ் விரதத்தின் சிறப்பம்சமாகும்.

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது சைவமக்களின் நம்பிக்கை.
நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும். 


1. முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகளும்;

2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :-மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

5. ஐந்தாம்படி:-ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள

6. ஆறாம்படி:-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

7. ஏழாம்படி:-மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

8. எட்டாம்படி:-தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி:-பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

நவராத்திரி வழிபாட்டு முறை.

1. முதலாம் நாள்:- சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.முதல்நாள் நெய்வேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

2. இரண்டாம் நாள்:
- இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர்ச்சாதம்.

3. மூன்றாம் நாள்:- மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.

4. நான்காம் நாள்:- சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

5. ஐந்தாம் நாள்:- ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.

6. ஆறாம் நாள்:- அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய்ச்சாதம்.

7. ஏழாம் நாள்:- ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டுச் சாதம்.

8. எட்டாம் நாள்:- அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.

9. ஒன்பதாம் நாள்:- அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும். ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்
இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது. அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர். அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.

அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம்.

மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் “படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்” என்று பிரம்மா கூற. அறிவிலி அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.

“தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள்” என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆளாகி துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.

சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்டதேவர்கள் தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.
நவராத்திரி வரலாறு
தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கும் நவராத்திரி விரதம் உருவானதற்கான புராணக் கதை.

சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.

தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்’ என்றாள்.

அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை.
பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.

இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.

அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றினான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற  காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள்.

சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விடுகிறான்.

இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள்
இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டியே நடைபெறுகின்றன.
மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர். இத் தேவியரை நவராத்திரி காலத்தில் மனமாரத் தியானித்து நாவாரப்பாடி, உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக. 
சிவகதி வேண்டி சிவராத்திரி விரதம்
செல்வச் சிறப்போடு வாழ நவராத்திரி விரதம்
சுபம்
சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர் அருளியது
வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்
தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்து
உண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே. 1.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பாற்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.                           2.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுதார்ந் துன்அருட் கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங் கொலோ உள்ங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே. 3.

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித் தருள்வாய் வடநூற் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே. 4.

பஞ்சப் பிதந்தரு செய்யபொற்பாத பங்கேருகமென்
நெஞ்சத் தடத்து அலராத தென்னே நெடுந்தாட் கமலக்
கஞ்சத் துவச முயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளை
தவிசொத் திருந்தாய் சகலகலா வல்லியே.                                 5.

பண்ணும் பரதமுங் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிதெய்த நல்காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலு அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே.                6.

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக் கண் நல்காய் உளங்கொண்டு தொண்டர்
தீட்டுங் கலைத் தமிழ் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகலகலா வல்லியே. 7.

சொல்விற் பனமும் அவதானமும் கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்
செல்விக்கரி தென்றுஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே சகலகலா வல்லியே.                  8.

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே சகலகலா வல்லியே. 9.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்ட ளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வ முள்தோ சகலகலா வல்லியே.                      10.
கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி
காப்பு
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தி உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.
படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமுந் துதித்தால்
கல்லுஞ் சொல்லாதோ கவி.

கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. .. 1
வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கு முரைப்பவளே. .. 2
உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லா மெண்ணி லுன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. .. 3
இயலா னதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலா லமைத்த கலைமகளே நின்றிரு வருளுக்கு
அயலா விடாம லடியேனையு முவந் தாண்டருளே. .. 4
அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராளென்னை யாளு மடமயிலே. .. 5
மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே யன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவே னுனதுபொற் பாதங்களே. .. 6
பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. .. 7
இனிநா னுணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை யகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலருறை பூவையை யாரணப் பாவையையே. .. 8
பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்க ணான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. .. 9
புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. .. 10
ஒருத்தியை யன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. .. 11
தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. .. 12
புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமா னுணர்த்திய வேதமுமே. .. 13
வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. .. 14
நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. .. 15
சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. .. 16
கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. .. 17
தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. .. 18
கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. .. 19
காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. .. 20
அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21
வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. .. 22
சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. .. 23
அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. .. 24
தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து
விழுவா ரருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்
தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. .. 25
வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. .. 26
பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. .. 27
இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. .. 28
கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. .. 29
பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்
திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. .. 30
சரசுவதியந்தாதி முற்றுப்பெற்றது.
சுப்பிரமணியபாரதியார் பாடிய சரஸ்வதி துதி
வெள்ளைத் தாமரைப் பூவிl இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ளாதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்!
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணைவாசகத் உட் பொருளாவாள்!

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்!
மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்!
கீதம்பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்!
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்!
இன்பமே வடிவாகிடப்பெற்றாள்!

வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்!
வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர்,
வித்தை ஓர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்,
வீரமன்னர் பின்வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம்!

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்!
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்!
உய்வமென்ற கருத்துடையோர்கள்
உயிரினுக் குயிராகிய தெய்வம்!
செய்வமென்றொரு செய்கையெடுப்போர்
செம்மை நாடிப்பணிந்திடுந் தெய்வம்!
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்!
கவிஞர் தெய்வம்! கடவுளர்தெய்வம்!

செந்தமிழ்மணி நாட்டிடை உள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்தனம் இவட்கே செய்வதென்றால்
வாழி அஃதிங்கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத்தேட்டை
வரிசையாக அடுக்கி, அதன்மேல்
சந்தனத்தை, மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்!

வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியிலாதொரு ஊரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!

ஊணர் தேசம் யவனர்தந்தேசம்
உதயஞாயிற்றொளிபெறு நாடு
சேணகன்றதோர் சிற்றடிச்சீனம்
செல்வப்பாரசிகப்பழந்தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்கடற்கப்புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம்
கல்வித்தேவியின் ஒளிமிகுந்தொங்க

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்லபாரத நாட்டிடை வந்தீர்
ஊனம் இன்று பெரிதிழைக்கின்றீர்!
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!
மானமற்று விலங்குகள் ஒப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?
போனதற்கு வருந்துதல் வேண்டா!
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!

இன்னறுங் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

நிதி மிகுத்தவர் பொற்குவைதாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத்தேன் மொழிமாதர்கள் எல்லாம்
வாணிபூசைக் உரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகையானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP